Friday 18 January 2013

இறகுகள் மூன்று

 சிறுவர் சிறுமியருக்குக் கதை சொல்ல, பாட்டு சொல்ல, விடுகதை போட ஒரு சிறிய முயற்சி 
 இறகுகள் மூன்று
ஒரு நாள் குரு தன் சீடனிடம், “நீ காட்டுக்குப் போய் மூலிகைகளைச் சேகரித்து வா. வழியில் ஏதாவது ஆபத்து நேர்ந்தால், இந்த இறகுகளைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்!” என்று கூறி மூன்று இறகுகளைக் கொடுத்தார்.
சீடன் காட்டில் வெகுநேரம் அலைந்து திரிந்தான். களைப்பாக இருந்தது. ஓய்வெடுக்க எண்ணினான். அப்போது, “தம்பி! இங்கே என்ன செய்கிறாய்? என் வீட்டுக்கு வா! விருந்து சாப்பிட்டு ஓய்வு எடுக்கலாம்” என்று அன்பாக அழைத்தாள் ஒரு பாட்டி.
சீடனும் பாட்டியும் ஒரு மாளிகையை அடைந்தனர். காட்டில் இத்தனை அழகான மாளிகையா!’ வியந்தவாறே சீடன் மாளிகைக்குள் நுழைந்தான். திடீரென்று ‘ஹா ஹ் ஹா!’ என்று சிரிக்கும் சத்தம்! ஐயோ! பாட்டி நின்ற இடத்தில் கொடூரமான தோற்றமுடைய ஒரு மந்திரவாதி!
மந்திரவாதி, “உனக்கா விருந்து? நீதான் இன்று என் விருந்து” என்றான். சீடன் நடுங்கினான். தப்புவதற்கு என்ன வழி? “அழுக்காக இருக்கும் என்னையா சாப்பிடப் போகிறாய்? சற்றுப் பொறு. குளித்து விட்டுச் சுத்தமாக வருகிறேன்!” என்றான்.
குளியலறைக்குள் சென்ற சீடன் ஒரு இறகைக் கீழே வைத்தான். “மந்திரவாதி கூப்பிடும் போதெல்லாம் என்னைப் போல் பேசு” என்று கூறிச் சன்னல்வழியாகக் குதித்து ஓடி விட்டான்.
மந்திரவாதி சீடனைக் கூப்பிடும் போதெல்லாம், “இதோ வந்துவிட்டேன்! இதோ வந்துவிட்டேன்!” என்று பதில் வந்து கொண்டே இருந்தது.
சந்தேகப்பட்ட மந்திரவாதி குளியலறைக்குள் நுழைந்தான். சீடன் இல்லாததைக் கண்டு ஆத்திரம் அடைந்தான். “என்னையா ஏமாற்றுகிறாய்? இதோ உன்னைப் பிடிக்கிறேன்!” என்று கூறிச் சீடனைத் துரத்த ஆரம்பித்தான். சீடனை நெருங்கியும் விட்டான்.
சீடன் மிரண்டான். சட்டென்று இரண்டாவது இறகை எடுத்தான். “எனக்குப் பின்னால் ஒரு பெரிய ஆற்றை உருவாக்கு” என்று கட்டளையிட்டான். உடனே ஒரு பெரிய ஆறு உருவானது. அது மந்திரவாதியை அடித்துச் சென்றது. ‘அப்பாடா! தப்பித்தேன்!’ என்று பெருமூச்சு விட்டான் சீடன்.
‘மடக்... மடக்...’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். ‘ஐயோ! இதென்ன!! மந்திரவாதி ஆறு முழுவதையும் குடித்து விட்டானே!
சீடன் மூன்றாவது இறகை எடுத்தான். “எனக்குப் பின்னால் ஒரு பெரிய காட்டுத் தீயை உருவாக்கு!” என்றான்.
உடனே தீ உருவானது. ஆனால் மந்திரவாதி, தான் குடித்த ஆற்றுநீரை உமிழ்ந்து தீயை அணைத்து விட்டான்!
தலைதெறிக்க ஓடிய சீடன், குருவிடம் வந்து சேர்ந்தான். மந்திரவாதியும் பின் தொடர்ந்து வந்தான்.
“உன் சீடனை என்னிடம் கொடுக்கிறாயா? இல்லை உன்னைச் சாப்பிடட்டுமா?” என்று குருவை மிரட்டினான். குரு, “உனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளும் எனக்குத் தெரியும்! ஒரு போட்டி வைப்போம். அதில் நீ வென்றால் சீடனை அழைத்துப் போ” என்றார்.
“சரி போட்டியை ஆரம்பி” என்றான் மந்திரவாதி. “இந்த மாளிகை அளவுக்கு உன்னால் உயரமாக முடியுமா?” என்றார் குரு. உடனே மந்திரவாதி, தன் உடலை மிகவும் உயரமாக்கிக் காட்டினான்.
“உயரமாவது எல்லோருக்கும் சுலபம். பட்டாணி அளவுக்குச் சிறியதாக மாறு பார்ப்போம்!” என்றார் குரு.“இது என்ன பெரிய காரியம்!” நொடியில் மந்திரவாதி பட்டாணியாக மாறினான். குரு உடனே பட்டாணியை வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டார்.
அன்றிலிருந்து மந்திரவாதி யார் கண்ணிலும் தென்படவில்லை.